Tuesday, May 11, 2010

”இனியொரு விதி செய்வோம்”

அமீரகத்தில் முதன் முறையாக மகளிர் மட்டுமே மேடையில் தோன்றிய வித்தியாசமான நிகழ்ச்சியை 100வது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமீரகத் தமிழ் மன்றத்தின் மகளிர் பிரிவினர் அரங்கேற்றினர்.


‘இனியொரு விதி செய்வோம்’ என்ற தலைப்பினில் ஏப்ரல் 23 ஆம் தேதி நிகழ்ந்த இந்த மகளிர் மட்டும் நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக நடிகையும் பாடலாசிரியையுமான ரோகினி கலந்து கொண்டார்.


மகளிர் மட்டும் மேடையேறிப் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் ஆர்த்திகா ஆசிபின் வரவேற்புரையை தொடர்ந்து நிவேதிதா குழுவினர் மற்றும் வர்ஷா குழுவினரின் நடனம் பார்வையாளர்களை சுண்டி இழுத்தது. நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளரென்று தனியாக யாருமில்லாமல் முழுக்க முழுக்க திரையில் தோன்றி விழாவைத் தொகுத்து வழங்கிய விதமும் பார்வையாளர்களைக் கவர்ந்தது.


தொடர்ந்து நிகழ்ந்த ‘என் மனதை நீ அறிவாய்’ நிகழ்ச்சி தாய்க்கும் மகளுக்குமான போட்டி நிகழ்ச்சியாக அரங்கேறியது. ஆறு அணிகள் குறிஞ்சி முல்லை மருதம் பாலை நெய்தல் எனத் தமிழின் ஐந்து திணைகளை அடிப்ப்டையாக வைத்து கலந்து கொண்டனர் ஆறவாது அணிக்கு தமிழின் ஆறாம் திணையான இணையம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை வழங்கிய திருமதி வகிதா நஜிமுதீனும் பெனாசிரும் தாயும் மகளும் என்பதும் இருவருக்குமே இம்மாதிரியான நிகழ்ச்சி முதன்முறை என்பதும் பார்வையாளர்களுக்கு உற்சாகம் தருவதாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து செல்வி வித்யாவின் நளினமான விரல்களில் வழிந்தோடிய இசைச்சாரலில் அரங்கம் நிறைந்திருந்தது.

மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தினத்தின் சிறப்பைப் பற்றி லட்சுமிப்ரியா சிறப்புரையாற்ற அமீரகத் தமிழ் மன்றத்தின் மகளிர் பிரிவு தயாரித்து வழங்கிய “இனியொரு விதி செய்வோம்’ என்ற குறுநாடகம் மிகச் சிறப்பாக் அரங்கேறியது. பொற்செல்வி கண்ணன், அனுஷ்யா கந்தநாதன், நிவேதிதா ஆனந்தன், பர்வீன் ஃபாத்திமா, பெனாசிர் ஃபாத்திமா, ஜெஸிலா ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்ட இந்நாடகத்தினை ஜெஸிலாவே உருவாக்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ’அரும்புகள்’ நிகழ்ச்சியில் தளிர்களின் பூனைநடையும் புன்னகையும் ஆடை அலங்காரங்களும் அரங்கத்தை ஆர்ப்பரிக்க வைத்தது. நிகழ்ச்சியின் இறுதியில் ‘மிஸ் ஏடிஎம்’மாக ஃபாத்தின் ஜுமானா தேர்ந்தெடுக்கப்பட்டார்

மேடையில் தொழிநுட்பத்தை சிறப்பாக நுழைத்து ஒருவரே இருவராகத் தோன்றி ஆடிய நடனத்தை செல்வி நிவேதிதா ஆனந்தன் நிகழ்த்தியபோது அரங்கம் அதிர்ந்தது. இத்தகைய நிகழ்வு அமீரக மேடையில் அரங்கேறியது இதுவே முதன்முறையும் கூட.

அமீரகத்தில் சமூக சேவைக்காக இயங்கும் பெண்மணிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களில் சிறந்தவர்களை இணைய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுத்து சிறந்த தமிழ்ப்பெண்மணி-2010 விருதை டாக்டர் சுப்புலெட்சுமி பாலாவுக்கு நடிகை ரோகினி வழங்கினார்.

இதைப்போன்றே சிறந்த சமையல் கலைஞருக்கான ‘சுவையரசி-2010’ பரிசை ஜெபீன் தாஜ் தட்டிச் சென்றார். விழாவில் ஹலோ எஃப் எம்மின் ரேவா, இந்தியத் தூதரகத்தின் மது சேத்தி, பேஷன் கோல்ட் ஜுவல்லரியின் ஹெலிஷா மற்றும் துபாய் பெண்கள் உயர்தொழில் நுட்பக் கல்லூரியின் எனிட் மார்ட்டின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் க்லந்து கொண்டு சிறப்பித்தனர்
விழாவில் பேசிய முதன்மை விருந்தினர் நடிகை ரோகினி ஆண்களைச் சாராமல் பெண்கள் வாழ்வதில் இருக்கும் சிரமங்களையும் நடைமுறைச் சிக்கல்களையும் எடுத்துரைத்தார். விழாவில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்குபெற்றதைக் குறிப்பிட்டு மகிழ்ந்த அவர் இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டுமெனப் பாராட்டினார். அதே சமயம் இத்தகைய விழாக்களுக்குப் பின்னால் உழைத்த ஆண்களையும் மறந்து விடக் கூடாதென பார்வையாளர்களின் பலத்த கரவொலிக்கிடையில் குறிப்பிட்டார்.

நீண்ட 30 நிமிட உரையில் அவரது தெள்ளிய தமிழும் சமூகம் குறித்த அவரது அக்கறையும் பெண்கள் குறித்த தெளிவான பார்வையும் அவரது பன்முகப்பட்ட பார்வையும் புலப்பட்டது. பரிசளிப்பு விழாவை ஜெஸிலா தொகுத்து வழங்கினார். பெனாசிர் நன்றியுரை வழங்கினார்.

Wednesday, April 14, 2010

அமீரகத்தின் `சிறந்த தமிழ்ப்பெண்மணி-2010`


அமீரகத் தமிழ் மன்றம் அமீரகத்தில் முதன் முறையாகப் பெண்கள் மட்டுமே மேடையில் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சியைக் கொண்டாடவிருக்கிறது


வரும் 23ஆம் தேதி துபாய் உயர் தொழில்நுட்பப் பெண்கள் கல்லூரியில் அரங்கேறவிருக்கும் இந்தப் பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு அனைவரையும் அமீரகத் தமிழ் மன்றம் அன்புடன் அழைக்கிறது

விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகையும் பாடலாசிரியையுமான ரோஹினி கலந்து கொள்ளவிருக்கும் இவ்விழாவில் அமீரகத்தில் இருந்து கொண்டு சமூகத்திற்குத் தொண்டாற்றும் சிறந்த மகளிரை அடையாளம் கண்டு அவர்களுக்கு அமீரகத்தின் `சிறந்த தமிழ்ப்பெண்மணி-2010` விருது வழங்கும் நிகழ்ச்சியும் அரங்கேறவிருக்கிறது இதற்காக அமீரகத்தில் சமூகத் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் நான்கு பெண்மணிகளை அமீரகத் தமிழ் மன்றம் அடையாளம் கண்டிருக்கிறது வாக்களிப்பு மூலமாகவும், நடுவர் குழு மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பெண்மணி விழாவின் போது சிறப்பிக்கப்படுவார்

உங்கள் வாக்குகளை அமீரகத் தமிழ் மன்றத்தின் வலைத்தளத்திற்குச் சென்று வழங்குங்கள். அமீரகத்தில் சமூகத் தொண்டாற்றி வரும் பெண்களை உற்சாகப்படுத்துங்கள்.

அமீரகத் தமிழ் மன்றம்

“இனியொரு விதி செய்வோம்”


எதிர்வரும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் “இனியொரு விதி செய்வோம்” என்ற மகளிர் மட்டும் பங்கு பெறும் நிகழ்ச்சி அரங்கேறவிருக்கிறது.


துபாயில் அமைந்துள்ள பெண்கள் உயர் தொழில்நுட்பக்கல்லூரி அரங்கில் வைத்து நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு திரைப்பட நடிகை ரோஹினி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார்

அமீரகத்தில் சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களில் சிறந்தவர்களுக்கு அமீரகத்தின் ”சிறந்த தமிழ்ப் பெண்மணி-2010” விருதினை வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன

இதைப்போன்றே ”சுவையரசி-2010” என்ற விருதை சமையல் கலையில் மிகச் சிறந்து விளங்கும் இல்லத்தரசிகளுக்காக அமீரகத் தமிழ் மன்றம் வழங்கவிருக்கிறது

குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள், மகளிர் அரங்கேற்றும் குறுநாடகம், சிறுமியருக்கான நாகரிக மேடைஉலா இன்னும் மகளிர் பங்கு பெறும் பல்வேறு சுவையான நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன

அனுமதி இலவசமென்றாலும் முன்னால் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற வகையில் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள atmuae@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்

பத்தாம் ஆண்டு விழா

அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா பெப்ரவரி மாதம் 18ஆம் தேதி துபாய் பெண்கள் உயர் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது

விழாவில் பத்தாம் ஆண்டு விழா மலரை நடிகரும் தொழிலதிபருமான ஆர்.கே வெளியிட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு பெற்றுக்கொண்டார்.

சிறுமியரின் கண்கவர் நடனங்கள், ரோபோ ஷங்கர், சிவகார்த்திகேயன் ஆகியோரது நகைச்சுவை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தின.

விழாவின் சிறப்பு நிகழ்வாக கோபிநாத் நடத்திய ‘வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை சுவையானதா?சுமையானதா?’ என்ற விவாத அரங்கமும் நடைபெற்றது

வணக்கம்!!

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உள்ளங்களுக்கு

வணக்கமும் வாழ்த்துகளும்!!

கடந்த பத்தாண்டுகளாக அமீரகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றத்தின் வலைப்பூவிற்கு உங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்

2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் ஓர் உணவகத்தில் இணையம் வழி அறிமுகமான பத்து நண்பர்கள் கூடிப் பேசியபோது உருவானதுதான் ‘அமீரகத் தமிழ் இணைய நண்பர்கள் அமைப்பு’

அந்த காலகட்டத்தில்  கோலோச்சிக் கொண்டிருந்த தமிழ் இணையம் என்ற மின் மடல் குழுவில் எழுதிக் கொண்டிருந்த நண்பர்கள் கணினியில் தமிழ் குறித்த விழிப்புணர்வை அமீரகத்தில் இருப்பவர்களுக்கு உருவாக்குவதற்காக உருவான இவ்வமைப்பு பின்னர் மெல்ல மெல்ல விரிவடைந்து ‘அமீரகத் தமிழ் மன்றம்” எனப் பெயர் மாற்றம் கண்டு இப்போது பத்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது

இந்தச் சூழலில் இந்த அமைப்பின் செயல்பாடுகளையும் இவ்வமைப்பில் எல்லா வருடமும் வெளியிடப்படும் ஆண்டு மலர்களில் வெளியான சிறந்த படைப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இவ்வலைப்பூ

மீண்டும் சந்திக்கிறோம்!